தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து

தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து

Update: 2022-06-24 11:32 GMT

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க், பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 19). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் ஹரி (20). ஹரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்சினையில் ஹரியை சில வாலிபர்கள் தாக்கினர். இது தொடர்பாக ஹரி தனது நண்பர் அஸ்வினிடம் தெரிவித்தார். இதனையடுத்து அஸ்வின் தனது நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோருடன் சென்று ஹரியை தாக்கிய நபர்களை கண்டித்தார்.

அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அஸ்வின் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தியதில், அஸ்வின், பிரகாஷ் மற்றும் சந்தோசுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய யுவராஜ், நிர்மல்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரமோத்தை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்