வாட்டி வதைக்கும் வெயில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது? ஜூன் 7-ந்தேதி திறக்க வாய்ப்பு

வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி போகிறது. ஜூன் 7-ந்தேதி பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-05-26 00:20 GMT

சென்னை,

2022-23-ம் கல்வியாண்டுக்கான 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள், பொது தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கின்றன. தேர்வு எழுதிய அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், 2023-2024-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பையும் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

எதிர்பார்ப்பு

அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கேற்றபடி, பள்ளிகளில் ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. மாணவர் சேர்க்கை உள்பட அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடத்தப்படுகின்றன. இதற்கிடையில், தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

7-ந்தேதி திறக்க வாய்ப்பு

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நேற்று இரவு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில், அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அடுத்த மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் இது பற்றி கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, அது பற்றிய முறையான அறிவிப்பு இருப்பதாக தெரிவிக்கவில்லை. அவ்வாறு இருந்தாலும் அது தொடர்பான அறிவிப்பை அமைச்சர்தான் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவித்துவிட்டனர். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்