சென்னையில் ஸ்கூட்டர் திருட்டு ராணி கைது

சென்னையில் ஸ்கூட்டர் திருட்டு ராணி தில் சாந்தியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-03 09:18 GMT

சென்னை தியாகராயநகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாலா (வயது 36). இவர் தனது கணவர் மூலம் மாம்பலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். புகார் மனுவில் தியாகராயநகர் பர்கிட் சாலையில் நிறுத்திவைத்திருந்த தனது ஸ்கூட்டரை பட்டப்பகலில் யாரோ திருடி சென்றுவிட்டார்கள் என்றும், அதை மீட்டு தரும்படியும் கூறியிருந்தார். இதுதொடர்பாக மாம்பலம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர் ஸ்கூட்டரை திருடிச்சென்றது தெரியவந்தது. கேமரா பதிவில் இடம் பெற்றுள்ள பெண்ணின் படத்தை ஆய்வு செய்ததில் அவர் யார்? என்று தெரியவந்தது. அவரது பெயர் சாந்தி என்ற தில் சாந்தி (56) ஆகும்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவர் மேல் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தனியாக செல்லும் பெண்களை ஏமாற்றி பணம், நகைகள் பறிப்பது, கள்ளச்சாவி போட்டு ஸ்கூட்டரை திருடுவதில் தில் சாந்தி கைதேர்ந்தவர். போலீசார் இவரை திருட்டு ராணி என்று அழைக்கிறார்கள். இவர் திருடிய ஸ்கூட்டரை தனது வீட்டு முன்பே நிறுத்திவிட்டு தைரியமாக உலா வந்தார். போலீசார் தில் சாந்தியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்