நர்சுக்கு கத்திரிக்கோல் வெட்டு; கணவர் கைது
தட்டார்மடம் அருகே நர்சுக்கு கத்திரிக்கோல் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே நர்சுக்கு கத்திரிக்கோல் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
நர்சு
தட்டார்மடம் அருகே உள்ள கடாட்சபுரம் அரசு துணை சுகாதார நிலைய குடியிருப்பில் வசிப்பவர் தினகரன் (வயது 46), கார் டிரைவர். இவரது மனைவி முத்து விஜயா (45). இவர் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
தினகரனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கத்திரிக்கோல் வெட்டு
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்து விஜயா, நவமுதலூர் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினகரன் தனது மனைவி முத்து விஜயாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர், கத்திரிக்கோலால் முத்து விஜயாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கைவிரல் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவர் கைது
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் முகம்மது ரபீக் வழக்குப்பதிந்து, தினகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.