பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி நடந்தது.
நெல்லை:
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள் விஞ்ஞான ரதம் என்ற அறிவியல் குழுவினர் செய்முறை மூலம் பயிற்சி அளித்தனர்.
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் பாடங்களை செய்முறை அடிப்படையில் புரிந்து கற்றுக் கொள்வதற்காக சிறப்பு செய்முறை விளக்க பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''பள்ளி மாணவ-மாணவிகள் அறிவியல், கணித பாடங்களை முழு ஆர்வத்துடன் புரிந்து கொண்டு படித்தால் மட்டுமே சாதிக்க முடியும். தற்போது அளிக்கப்படும் பயிற்சியை தொடர்ந்து சிறிய அளவிலான தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறும் 30 மாணவ-மாணவிகள் கூடங்குளம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு அழைத்து சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.
சென்னையை சேர்ந்த விஞ்ஞான ரதம் அமைப்பின் திட்ட இயக்குனர் அறிவரசன், நவீன்குமார், சதீஷ்குமார் ஆகியோர் அறிவியல் தொடர்பான பாடங்களை ஆய்வக உபகரணங்கள் மூலம் எளிமையாக விளக்கி செய்து காட்டினர்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் செல்லையா, தலைமை ஆசிரியர் உலகநாதன், ரோட்டரி கவர்னர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.