பள்ளிகள் இன்று திறப்பு: சேலம் ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

பள்ளிகள் இன்று திறப்பதை முன்னிட்டு சேலம் ரெயில் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-06-12 21:06 GMT

சேலம்:

பள்ளிகள் இன்று திறப்பதை முன்னிட்டு சேலம் ரெயில் மற்றும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன்படி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்ததும் வெளி மாவட்டங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும், பள்ளிகள் திறப்பதற்கு முதல் நாள் சொந்த ஊரில் இருந்து தாங்கள் படிக்கும் ஊர்களுக்கு பஸ், ரெயில்களில் செல்வதும் வழக்கம். அதன்படி பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு நேற்று மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் தங்கள் பெற்றோருடன் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கூடினர்.

பயணிகள் கூட்டம் அலைமோதியது

அதே போன்று கடந்த சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை ஆகும். விடுமுறை தினத்தன்று அரசு அலுவலகங்களில் வெளி மாவட்டத்தில் பணிபுரிபவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்வதும், பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் இடங்களுக்கு செல்வது வழக்கம். இதனால் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும்.

நேற்று கோவையில் இருந்து சென்னை சென்ற சதாப்தி ரெயில் சேலம் வந்த போது அதில் ஏராளமான பயணிகள் ஒருவரையொருவர் முந்தியடித்து கொண்டு ரெயிலில் ஏறினர். அதன்படி வெளி மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானவர்கள் கூடியதால் நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்