திருவாரூர் மாவட்டத்தில்,1,282 பள்ளிகள் திறப்பு
திருவாரூர் மாவட்டத்தில், 1,282 பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் வகுப்பில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில், 1,282 பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாள் வகுப்பில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்குப்பின் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 12-ம் வகுப்புக்கு 20-ந் தேதியும், 11-ம் வகுப்பிற்கு 27-ந் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழகத்தில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனாவுக்கு பிறகு...
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. குறைந்த நாட்களே பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் நடந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் உரிய காலத்தில் திறக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார், மெட்ரிக் பள்ளிகள் என 1,282 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.
இனிப்புகள் கொடுத்து வரவேற்பு
முதல் நாள் வகுப்பில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மிகுந்த உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ரவி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் அருண்காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் தவுலத் இக்பால், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கார்த்தி மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
மேலும் அரசின் உத்தரவின்படி பாடப்புத்தகங்கள் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
குடவாசல் - நீடாமங்கலம்
குடவாசல், இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. இரவாஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ராஜா, பாடப்புத்தகங்களை வழங்கினார். நீடாமங்கலம் வட்டாரத்தில் 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 14 நர்சரி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.