பள்ளிகள் நாளை மறுநாள் முதல் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளதையொட்டி தயார் நிலையில் வகுப்பறைகள் வைக்கும் பணி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை:
பள்ளிகள் நாளை மறுநாள் திறப்பு
தமிழகத்தில் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித்தேர்வு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதன்பின் கோடை விடுமுறை தொடங்கியது. கடந்த மே மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வுகள் முடிந்த பின் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 13-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கும் பணி நடைபெறுகிறது.
பாடப்புத்தகங்கள்
இதேபோல தனியார் பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படுவதற்கு வகுப்பறைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கும் படி பணி நடைபெறுகிறது. மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 1,700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது.
பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பேக், உபகரணங்கள் உள்ளிட்டவை அந்தந்த பள்ளிகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் நாளை மறுநாள் காலை பள்ளிக்கு வந்ததும் அவர்களுக்கு அவை வழங்கப்படும்.