ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு-தலைவாசல் அருகே பரிதாபம்
தலைவாசல் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார்.
தலைவாசல்:
பள்ளி மாணவன்
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் ஜெயசக்தி (வயது 16). 10-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள தன்னுடைய தாத்தா வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் தன்னுடைய தாத்தாவுடன் அங்குள்ள ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க ஜெயசக்தி சென்றதாக தெரிகிறது. சீனிவாசன் மாடு மேய்க்க, ஜெயசக்தி அங்குள்ள ஏரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
உடல் மீட்பு
திடீரென ஜெயசக்தியை காணவில்லை. அவனை அந்த பகுதியில் சீனிவாசன் தேடினார். எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் ஏரிக்கு விழுந்து இருக்கலாம் என சந்தேகப்பட்டார். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
ஏரிக்குள் இறங்கி மாணவனை தேடினர். அப்போது மாணவன் ஜெயசக்தி ஏரிக்குள் மூழ்கி பிணமாக கிடந்தார். உடனே மாணவனின் உடலை மீட்டனர். ஆத்தூர் போலீசார் மாணவன் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவன் ஏரியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏரியில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.