ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பள்ளி மாணவர்கள்
சேறும், சகதியுமான மண் சாலையை மாற்றக்கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பள்ளி மாணவர்களால் முதுமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
சேறும், சகதியுமான மண் சாலையை மாற்றக்கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பள்ளி மாணவர்களால் முதுமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
மண் சாலை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமலை ஊராட்சியில் முதுகுளி, நம்பிக்குன்னு, மண்டக்கரா, புலியாளம், கோழிமலை, கூவக்கொல்லி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் முதுகுளியில் இருந்து கூவக்கொல்லிக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மண் சாலை செல்கிறது.
இந்த நிலையில் முதுகுளியில் இருந்து தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் கூவக்கொல்லிக்கு நடந்து சென்று, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும் கூவக்கொல்லி உள்பட பல்வேறு கிராம மக்கள் முதுகுளி வழியாக தினமும் கூடலூருக்கு சென்று திரும்புகின்றனர்.
பேச்சுவார்த்தை
தற்போது தொடர் மழை பெய்து வருவதால் முதுகுளி-கூவக்கொல்லி சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் வழுக்கி விழும் நிலை தொடர்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் அல்லது தார்சாலை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து மாணவ-மாணவிகள் சுமார் 50 பேர் பள்ளிக்கூடம் செல்லாமல் ஊராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையை சீரமைக்கும் வரை ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து படிக்கப்போவதாக கூறினர். மேலும் அவர்களது பெற்றோரும் வந்தனர். இதை அறிந்த ஊராட்சி தலைவர் கோமதி, வருவாய் ஆய்வாளர் உமா மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர் போராட்டம்
இதையடுத்து ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின் பேரில் முதுகுளி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாணவ-மாணவிகளை அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
முதுமலை வனப்பகுதியில் ஊராட்சி உள்ளதால் சாலை வசதி முழுமையாக செய்து தரவில்லை. பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் தினமும் நடந்து சென்று வருகின்றனர். சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வழுக்கி விழுந்து சகதியுடன் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இது சம்பந்தமாக பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இனிமேலும் நடவடிக்கை எடுக்க விட்டால் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.