அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

சேத்தியாத்தோப்பு அருகே அரசு பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-01-10 20:07 GMT

சேத்தியாத்தோப்பு,

சிதம்பரத்தில் இருந்து கீழ்நத்தம் வழியாக சேத்தியாத்தோப்புக்கு தினமும் காலை 7.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் கீழநத்தம், இடையன்பால்சொரி, மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், வட்டப்பாக்கம், வெய்யலூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் அருகே உள்ள சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதி கல்வி நிறுவனங்களுக்கு சென்று படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பஸ் திடீரென நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், அங்குள்ள பஸ் நிறுத்தத்தில், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்ததுடன், பள்ளி, கல்லூரி நேரத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பேசி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்ற மாணவர்கள், பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட பஸ்சை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்