பள்ளி மாணவன் மூச்சுத்திணறி சாவு

திருச்சியில் பள்ளி மாணவன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான். குழாயடியில் குளித்ததுதான் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-28 13:28 GMT

திருச்சி, மே.29-

திருச்சியில் பள்ளி மாணவன் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான். குழாயடியில் குளித்ததுதான் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

6-ம் வகுப்பு மாணவன்

திருச்சி உறையூர் காளையன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். பெயிண்டர். அவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 14). இவர், திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜசேகரை பிரிந்து அவரது மனைவி சென்று விட்டார். இதனால், தந்தையான ராஜசேகர் பராமரிப்பில் ஜீவானந்தம் வளர்ந்து வந்தான்.

மூச்சுத்திணறி சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள பொதுக்குழாயில் ஜீவானந்தம் குளித்தான். அதன் பின்னர் வீட்டுக்கு வந்து நன்றாக படுத்து தூங்கி விட்டான். இந்த நிலையில் நள்ளிரவு திடீரென ஜீவானந்தத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கண்விழித்த ராஜசேகர், உடனடியாக மகனை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ஜீவானந்தம் உடலை பரிசோதித்த டாக்டர், அவன் மூச்சு திணறி இறந்து விட்டதாக கூறினார்.

காரணம் என்ன?

இரவு வேளையில் குழாயடியில் அம்மாணவன், நன்றாக குளித்து இருக்கிறார். அப்போது குழாய் தண்ணீரை குடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாக படுத்து தூங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மாணவன் மரணம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்