பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி

கடையநல்லூர் அருகே, நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-04-30 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே, நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி மாணவன்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே துரைசாமிபுரம் காலனி தெருவில் குடியிருப்பவர் திருமலை குமார். கூலித்தொழிலாளி. இவருக்கு 3 மகன்கள் உண்டு.

அதில் கடைசி மகன் அபினேஷ் (வயது 14). இவன் இடைகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறை என்பதால் நேற்று மாலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் அருகில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் குளிக்க சென்றான். அந்த கிணறு சுற்றுச்சுவருடன் சுமார் 45 அடி ஆழம் கொண்டது. அதில் சுமார் 40 அடி தண்ணீர் உள்ளது.

தண்ணீரில் மூழ்கினான்

அந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் அபினேஷ் நடந்து சென்றான். அப்போது அவன் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவனுக்கு நீச்சல் தெரியாததால் கிணற்று தண்ணீரில் மூழ்கி விட்டான். இதைக்கண்ட அவனுடைய நண்பர்கள் பதறியவாறு ஓடிச்சென்று வீட்டில் உறவினர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினர்.

உடனே இதுகுறித்து உறவினர்கள் கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கும், இலத்தூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

உடல் மீட்பு

உடனே இலத்தூர் போலீசார் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த கிணற்று பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். அதன் பின்னர் கடையநல்லூர் தீயணைப்பு வீரர்கள் பாதாள கரண்டி போன்றவை மூலம் கிணற்றுக்குள் இரண்டு மணி நேரம் தேடினர். அப்போது அபினேஷ் அணிந்திருந்த டவுசரில் பாதாள கரண்டி கொக்கி சிக்கியது. அதன் பின்னர் கிணற்றில் மூழ்கி, இறந்த நிலையில் கிடந்த அபினேஷ் உடலை மீட்டனர்.

சோகம்

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்