நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காருக்குடி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. விவசாயியான இவரது மகன் கவிப்ரியன்(வயது 13). வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கவிப்ரியன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி விளையாட்டு வகுப்பு நேரத்தில் கவிப்ரியன் சக மாணவர்களோடு விளையாட்டு திடலில் ஓடியுள்ளான். அப்போது அவன் திடீரென்று மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை ஆசிரியர்கள் மீட்டு வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.