கார் மோதி பள்ளி மாணவன் சாவு
பொள்ளாச்சி அருகே நடந்து சென்ற போது கார் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார். அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே நடந்து சென்ற போது கார் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார். அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன் சாவு
திண்டுக்கலை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு உணவகத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் குடும்பத்துடன் உணவகம் அருகில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவர் கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் சந்தோஷ் தனது நண்பர்களுடன் ஆச்சிப்பட்டி பஸ் நிறுத்தம் நோக்கி கோவை ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் சந்தோஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் கைது
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து, சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இறந்த சந்தோஷின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது சிகப்பு நிற கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த கார் வடுகபாளையத்தை சேர்ந்த சுஜித் (22) என்பவருக்கு சொந்தமானது என்பதும், கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக சுஜித் மீது வழக்குபதிவு அவரை செய்து கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.