பள்ளிக்கூடம் திறப்பது மீண்டும் தள்ளிவைப்பு -தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிக்கூடம் திறப்பது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-06-06 00:25 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.

வாட்டி வதைக்கும் கோடை வெயில்

கோடை விடுமுறைக்கு பின்னர், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் இறுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி 1 முதல் பிளஸ்-2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7-ந் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

சொந்த ஊர் திரும்பினர்

இதன் காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட குழந்தைகளுடன் வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்பினர்.

மேலும் குழந்தைகளுக்கு தேவையான பள்ளி சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்குவதில் பெற்றோர் தீவிரமாக இருந்தனர்.

கோடை வெயிலின் உக்கிரம் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. அக்னி நட்சத்திரம் விடை பெற்ற போதிலும் வெயிலின் கோரத்தாண்டவம் மட்டும் குறையவில்லை. நாளுக்குநாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்து கொண்டே வருகிறது.

மீண்டும் தள்ளி வைக்க கோரிக்கை

குறிப்பாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் தினமும் வெயில் கொளுத்துகிறது. பல முக்கிய நகரங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை அதிகமாக வெப்பம் பதிவானது. இதனால் பகலில் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

வெயிலின் உக்கிர தாண்டவத்தால் வீடுகளிலேயே இருக்க முடியாத நிலையில் பள்ளிகளை திறந்தால் மாணவ, மாணவிகள் வெயிலின் கொடுமையை எப்படி தாங்குவார்கள்? என்ற பெற்றோரின் கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

பள்ளிகள் திறக்கும் தேதியை மீண்டும் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பினர் மூலம் எழுப்பப்பட்டது.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

இதனையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள்பள்ளிகள் திறப்பு குறித்து கேட்டனர்.

12-ந் தேதி பள்ளிகள் திறப்பு

அதற்கு அவர், 'வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளிவைப்பது என்று முதல்-அமைச்சருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந் தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும் பள்ளிகளை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது' என்றார்.

உடல்நலத்தை பாதுகாக்க...

மேலும் இதுதொடர்பாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில், 'கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுகின்றது' என கூறியுள்ளார்.

இதன்மூலம் கோடை வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பு 2-வது முறையாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்