கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் மழையால் சிங்கம்புணரி பகுதியில் கயிறு உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் மழையால் சிங்கம்புணரி பகுதியில் கயிறு உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரம்

தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து இரவு, பகலாக பலத்த மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. தொடர் மழையால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணி முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

தொழில் பாதிப்பு

காலை நேரத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற பணியாளர்களும், பல்வேறு பணிகளுக்கு சென்ற பணியாளர்களும் நனைந்து கொண்டே மோட்டார் சைக்கிளில் சென்றதை காணமுடிந்தது.. தொடர் மழை காரணமாக மானாமதுரை பகுதியில் நடைபெற்று வந்த மண்பாண்ட தொழில் பாதிப்படைந்ததால் தொழிலாளர்கள் மிகவும் கவலையடைந்தனர்.

சிங்கம்புணரி பகுதியில் பல ஆயிரம் டன் கயிறு உற்பத்தி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் கயிறு உற்பத்தி செய்யும் தொழில் கூடத்தில் மழைநீர் புகுந்தது. இதனால் கயிறு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கயிறு உற்பத்தி தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

மழை அளவு

பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக கண்மாய்கள், குளங்கள், வரத்து கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் ஏராளமான சிறுவர்கள் மீன் பிடித்தும், உற்சாகமாக குளித்தும் மகிழ்ந்தனர்.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை 2.60, தேவகோட்டை 5.20, காரைக்குடி 2.60, திருப்பத்தூர் 6.40, காளையார்கோவில் 4.60. இதில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 6.40 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதியில் 2.60 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்