கனமழை, சூறைக்காற்றால் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்

தினத்தந்தி செய்தி எதிரொலியால் கனமழை, சூறைக்காற்றால் சேதமடைந்த பள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-26 18:45 GMT

மொரப்பூர்:

தினத்தந்தி செய்தி எதிரொலியால் கனமழை, சூறைக்காற்றால் சேதமடைந்த பள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேற்கூரை சேதம்

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளம்பட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தது. இதனால் இந்த பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் தொடர்ந்து படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் தொடக்கப்பள்ளியை செயல்படுத்த அதிகாரிகள் அறிவுரை வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து அங்காடி மையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி மையமும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் ஒரே கட்டிடத்தில் இயங்குவதால் இடநெருக்கடி காரணமாக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மதிப்பீடு தயாரிப்பு

இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக கலெக்டர் சாந்தி, கனமழை, சூறைக்காற்றால் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், பள்ளம்பட்டி பள்ளி சேதமானதால் அதற்கு பதிலாக ரூ.19.10 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிதியை செந்தில்குமார் எம்.பி.யிடம் கோரப்பட்டு உள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கிடைக்க பெற்றவுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்