காட்டுப்பன்றி தாக்கியதில் பள்ளி மாணவர், மாணவி காயம்

கடையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றி தாக்கியதில் பள்ளி மாணவ-மாணவி காயம் அடைந்தனர்.

Update: 2022-12-22 18:45 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது, மலையடிவாரப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து அங்குள்ள விளை நிலங்களில் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும், வனவிலங்குகள் தாக்கி அவ்வப்போது பொதுமக்கள் காயம் அடையும் சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த மாதம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளைகுடியிருப்பு கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த கரடி கடித்து குதறியதால் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் வனவிலங்கு ஊருக்குள் புகுந்து 2 பேரை தாக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது

கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தில் நேற்று காலையில் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுப்பன்றி ஊருக்குள் சுற்றித்திரிந்தது. அப்போது, அங்குள்ள ஒரு தெருவில் ராஜ்குட்டி மகன் 10-ம் வகுப்பு மாணவன் பரசுராம், ராமர் மகள் பள்ளி மாணவியான வைஷ்ணவி உள்ளிட்டவர்கள் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் காட்டுப்பன்றி தெருவில் புகுந்து, அங்கிருந்த பரசுராம், வைஷ்ணவி ஆகியோரை தாக்கியது. இதில் 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து காட்டுப்பன்றி வனப்பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டது. காயம் அடைந்த 2 பேரும் கடையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்து செல்லும். ஆனால், நேற்று காட்டுப்பன்றி தெருவில் வந்து, 2 மாணவர்களை தாக்கிச் சென்றுள்ளது. இதனால் நாங்கள் பீதியில் உள்ளோம். ஆகவே, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்