விடுதிகளில் தங்கி பயில பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயில பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-23 20:06 GMT

32 விடுதிகள்

அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு, சிறுபான்மையினர் மாணவ-மாணவிகளுக்கென 28 பள்ளி விடுதிகள், 3 கல்லூரி விடுதிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரி விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி, தொழில்நுட்ப விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவர், மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவர், மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

ஆண்டு வருமானம்

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரவிதி மாணவிகளுக்கு பொருந்தாது.

பள்ளி விடுதிகளுக்கு 30-ந்தேதிக்குள்...

தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்