தங்கும் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல தங்கும் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-03 11:27 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல தங்கும் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

18 தங்கும் விடுதிகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் தங்கி கல்வி கற்க 18 தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் படிக்கும் மாணவர்களும் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விடுதிகளில் சேருவதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.

சாதி, வருமான சான்றிதழ்

தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதிக்கு முன்பும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்கு முன்பும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் விடுதியில் சேரும்போது சாதி மற்றும் வருமான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழ்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பித்து அரசின் சலுகைகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்