ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கான கலை திருவிழா; 146 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்படும் கலை திருவிழாவில் 146 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்படும் கலை திருவிழாவில் 146 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
கலை திருவிழா
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் வட்டார அளவிலான கலை திருவிழா நடத்தப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் நேற்று கலை திருவிழா தொடங்கியது. ஈரோடு வட்டார அளவிலான போட்டிகள் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்து வருகிறது. இதில் ஓவியம், தனிநபர் நடனம், பறை இசை, குழு நடனம், கவிதை, பேச்சு போட்டி உள்பட மொத்தம் 146 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 740 பேர் பங்கேற்கிறார்கள். இதேபோல் அனைத்து வட்டாரங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
மாநில போட்டி
இந்த போட்டிகள் மொத்தம் 4 நாட்கள் நடத்தப்படுகிறது. இதில் முதல் 2 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேலும், முதலிடம் பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்படுகிறது.