வினாக்கள் கசிந்து விடாமல் இருக்க 4-ம் வகுப்பு கேள்வித்தாளுக்கு கடும் பாதுகாப்பு; அதிகாரிகளின் தொடர் அறிவுறுத்தல்

அரசு பள்ளிக்கூடங்களில் 4-ம்வகுப்பு வினாக்கள் கசிந்து விடாமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கினார்கள்.

Update: 2022-09-26 21:20 GMT

ஈரோடு

அரசு பள்ளிக்கூடங்களில் 4-ம்வகுப்பு வினாக்கள் கசிந்து விடாமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கினார்கள்.

தேர்வு அறிவுரைகள்

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் முதல் பருவ தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை முன்னிட்டு கல்வித்துறை அதிகாரிகள் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

4 மற்றும் 5-ம் வகுப்புக்கு நேற்று தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான கேள்வித்தாள் பாதுகாப்பு தொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி வந்தனர்.

வினாக்கள் கசிந்துவிடக்கூடாது

குறிப்பாக 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பு வெளியே கசிந்து விடக்கூடாது. கேள்வித்தாள் வைக்கும் அறைகளுக்கு 2 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தேர்வு நடைபெறும் அன்றைய தினத்தில்தான் தொடக்கக்கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களிடம் வினாத்தாள்களை வழங்க வேண்டும் என்று முதலில் ஒரு அறிவுரை வழங்கப்பட்டது.

பின்னர், தேர்வு நடைபெறுவதற்கு முதல்நாள் ஒவ்வொரு வட்டார தொடக்கக்கல்வி அதிகாரியும் வினாத்தாள்களை ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் பொறுப்பு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் வந்தது.

அரசுப்பணி போட்டித்தேர்வா?

இறுதியாக 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கான அனைத்து தேர்வுத்தாள்களையும் ஒரே நாளில் தலைமை ஆசிரியர் வசம் வழங்க வேண்டும். 6 முதல் 8-ம் வகுப்புவரை தினசரி கேள்வித்தாள்கள் வழங்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வாறு தொடர்ச்சியாக தினசரி ஒவ்வொரு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகங்களில் இருந்து வழங்கப்பட்டது. ஆனால் நேற்று தேர்வு தொடங்கும் நேரத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில கேள்வித்தாள்கள் மட்டுமே வழங்கப்பட்டது. பிற கேள்வித்தாள்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:-

கேள்வித்தாளை தயார் செய்யாமலேயே இத்தனை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. தேர்வு எழுதினாலும் எழுதாவிட்டாலும் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் முழுமையாக வெற்றி என்பதுதான் முடிவு. இதற்கு ஏன் இத்தனை நடைமுறைகள் என்று தெரியவில்லை. அரசுப்பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு கூட இத்தனை அறிவுரைகள் வழங்கி இருப்பார்களா? என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்