பள்ளியின் முன்பு பொதுக்கழிப்பறை கட்டப்படுகிறதா?

பள்ளியின் முன்பு பொதுக்கழிப்பறை கட்டப்படுகிறதா? என்று கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-09-20 20:23 GMT


நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இளங்குளம் பரப்பாடியைச் சேர்ந்த விஜி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் நெல்லை மறைமாவட்ட சி.எஸ்.ஐ. சார்பில் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் முன்பாக நிழற்குடை, பொதுக்கழிப்பறைகள் கட்டுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இங்கு ஏற்கனவே காமராஜர் சிலை, குடிநீர் குழாய், ஆட்டோ ஸ்டாண்டு ஆகியவை உள்ளன.

இந்த சூழ்நிலையில் அங்கு கழிப்பறைகள் கட்டினால் அது, மாணவர்கள் இடையே சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும். பயணிகள் நிழற்குடை அமைத்தால், அங்கு பொதுமக்கள் கூடி, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்துவார்கள் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து, இந்த பணிகளை நிறைவேற்றக்கூடாது என தெரிவித்தோம். ஆனால் அதையும் மீறி, நிழற்குடை, கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளங்குளம் ஊராட்சித்தலைவர் சார்பில் விஜய நாராயணம் போலீசில் கடந்த 9-ந்தேதி புகார் அளிக்கப்பட்டும், பலன் இல்லை.

எனவே மாணவர்களின் சுகாதாரம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடத்தின் முன்பாக, பொதுக்கழிப்பறைகளும், பயணிகள் நிழற்குடையும் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்