18 வயதுக்குட்பட்ட164 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்க ஏற்பாடுகலெக்டர் மோகன் தகவல்

18 வயதுக்குட்பட்ட 164 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-20 18:45 GMT


விழுப்புரத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை மாவட்ட கலெக்டர் மோகன், தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அவர்களுக்கான உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்டவைகளை வழங்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை முதல்-அமைச்சர் பாதுகாத்து வருகிறார். மேலும் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு மாதாந்திர பராமரிப்புத்தொகை வழங்கிடும் வகையில் வயது தளர்வு முகாமை நடத்தி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார்.

164 பேருக்கு உதவித்தொகை

அதனடிப்படையில் இம்முகாமில் எலும்பு மற்றும் முடநீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நலமருத்துவர் ஆகியோர், மாற்றுத்திறன் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து 40 சதவீதத்திற்கு மேல் உடற்குறைபாடு இருப்பின் அவர்களுக்கு அரசு அறிவித்த உதவித்தொகை ரூ.1,500 உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இதன்படி 18 வயதிற்குட்பட்ட 164 மாற்றுத்திறனாளிகள் தகுதியானோர் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு வயதுதளர்வு குழு ஒப்புதலின்பேரில் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுவதோடு அவர்கள் சமூகத்தில் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கு வழிவகை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்