பட்டியல், பழங்குடியினத்தவருக்கு 35 சதவீத மானியத்தில் தொழில் திட்ட கடனுதவி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டியல் சமூக மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீத மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-18 13:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டியல் சமூக மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீத மானியத்தில் தொழில் கடனுதவி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மானியத்துடன் கடன்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-படித்த சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள, முதல் தலைமுறை தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்ட தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.5 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. திட்ட தொகையில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத் தொகையில் 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.75 லட்சம். மேலும் கடனை திரும்பச்செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டயம் அல்லது தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தொடர்பு கொள்ளலாம்

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிபெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்திற்கான லாரி, ட்ரக், ட்ரைலர் போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35 சதவீத தனிநபர் மானியமும், கடனைத் திரும்பச்செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீதம் வட்டி மானியமும் பெற்று பயன்பெறலாம்.

இது குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், எண்.5, தேவராஜ் நகர், (ஐ.வி.பி.எம் எதிரில்), ராணிப்பேட்டை அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 04172-270111/270222 என்ற எண்ணிலோ அல்லது www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்