செங்கோல் விவகாரம்: புனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை - ப.சிதம்பரம் கருத்து

செங்கோல் விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-30 07:54 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆலங்குடி தொகுதியில் உள்ள கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளேன். திருமயத்தில் நூலகம் அமைப்பது தொடர்பான டெண்டருக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.5 கோடியை மோடி அரசு குறைக்காமல் இருந்தால் போதும்.

டெல்லியில் நீதிகேட்டு போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. காவல்துறை மல்யுத்த வீரர்களை போல செயல்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. மல்யுத்த வீரர்களை மத்திய அமைச்சரோ அதிகாரிகளோ யாரும் சென்று சந்திக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது. செங்கோல் பற்றி நேற்று கூட ஆளுநர் ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 1947 ஆக.14-ல் மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியில் இல்லை, பாகிஸ்தானில் இருந்தார் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு, மற்றவை எல்லாம் புனையப்படுவது. துணைக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்