சேலத்தில் பயங்கரம் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது: குழந்தை உள்பட 7 பேர் படுகாயம்

சேலம் பொன்னம்மாபேட்டையில் வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், குழந்தை உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-10-17 20:52 GMT

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 63). இவர் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இவரது மனைவி ராஜேஸ்வரி (55). இவர்களுக்கு பிரியா (36), பானுமதி (32) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில், பானுமதி தனது கணவரை இழந்து மகள் தீக்‌ஷிதாவுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அவர், சேலம் கோ-ஆப்டெக்சில் பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே, மாணிக்கத்தின் மூத்த மகள் பிரியா தனது பிரசவத்திற்காக பெற்றோருடன் வசித்து வருகிறார். அவருடைய மகன் அவினேஷ் (7) மற்றும் ஒரு மாத குழந்தை ஹனித்ரா உள்ளனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை ராஜேஸ்வரி பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் திடீரென தீப்பிடித்தது.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததுடன் மேற்கூரையும் சிதைந்தது. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. மேலும், வீட்டின் பல இடங்களிலும், அருகில் உள்ள வீட்டின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டது.

7 பேர் படுகாயம்

தீ விபத்தில் வீட்டில் இருந்த மாணிக்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் பிரியா, பானுமதி மற்றும் அவர்களது குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே, வீட்டுக்குள் இருந்த 4 கியாஸ் சிலிண்டர்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டன.

தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரவு தூங்க சென்றபோது, கியாஸ் சிலிண்டரை சரியாக ஆப் செய்யவில்லை என தெரியவந்தது. இதனால் விடிய, விடிய கியாஸ் கசிந்து வீடு முழுவதும் நிரம்பியிருந்திருக்கலாம். இதன் காரணமாக நேற்று அதிகாலை ராஜேஸ்வரி எழுந்து அடுப்பை பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தனியார் மடம் உள்ளது. இந்த மடத்தில் சமையல் அறையில் உள்ள குளிர்பதன பெட்டியில் நேற்று காலை தீப்பிடித்தது. உடனே அங்கிருந்த மருதாம்பாள் (வயது 90), அவரது மகள் தனலட்சுமி (60) ஆகியோர் வெளியே ஓடி வந்தனர்.

சிறிதுநேரத்தில் அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கட்டிடம் இடிந்து மருதாம்பாள் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்