வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி
நாட்டறம்பள்ளி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி இளைஞர்களிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்து, போலி பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள சொரக்காயல் நத்தம் கிராமம், மனையாகர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 44). இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பன் நகரில் வசித்து வரும் சித்திக் உதுமான் என்பவரின் மகன் அப்துல் ரஹீம் (58) என்பவர், செல்போனில் பாபுவை தொடர்பு கொண்டார்.
அப்போது நான் சென்னை வடபழனியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் அலுவலகம் நடத்தி வருகிறேன். நியூசிலாந்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன். பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றையும் நானே வாங்கி தருகிறேன். ஒருவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்தால் போதும் என ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
ரூ.30 லட்சம் மோசடி
இதனை நம்பிய பாபு 5 இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப சென்னை வடபழனியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு வேலை வாங்கித் தருமாறு கூறி பணம் செலுத்தியுள்ளார். அதற்கு அப்துல் ரஹீம் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
பின்னர் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 இளைஞர்களிடம் தலா ரூ.1 லட்சம் என ரூ.30 லட்சத்தை பாபு பெற்று, அதை அப்துல் ரஹீம் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் போலியான பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை வழங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
கைது
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பெங்களூருவில் பதுங்கி இருந்த அப்துல் ரஹீமை, அவரது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படையினர் கண்டுபிடித்து அவரை கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.