அரசு வேலை வாங்கி தருவதாக கூறிரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி கைது

தேனியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-19 18:45 GMT

வேலை வாங்கி தருவதாக மோசடி

ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பவளம்நகரை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 50). இவர், தி.மு.க. கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய துணைச்செயலாளராக உள்ளார். இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், 'சின்னமனூர் அருகே அப்பிப்பட்டி விசுவநாதபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார். ஆண்டிப்பட்டி அருகே மேக்கிழார்பட்டி சீலகாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இருளன் (43), மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த தவமணி ஆகியோர் தனது தம்பி மற்றும் உறவினர்கள் பலருக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.87 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் இருளன், ஜெயக்குமார், தவமணி ஆகிய 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தி.மு.க. நிர்வாகி கைது

இதற்கிடையே வருசநாடு, கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள், தங்களிடமும் இருளன் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து விட்டதாக கூறி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணையில் துரைப்பாண்டி புகாரில் குறிப்பிட்ட ரூ.87 லட்சத்து 15 ஆயிரம் உள்பட மொத்தம் 45 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடியே 15 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதன்பேரில் இந்த வழக்கில் இருளனை நேற்று முன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். இவர், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஆவார். தற்போது இவர், தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழு அணி மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.

கைதான ஜெயக்குமாரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்