அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோட்டில் 20 பேரிடம் ரூ.93 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோட்டில் 20 பேரிடம் ரூ.93 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பெண் போலீசில் புகாா் அளித்துள்ளாா்.

Update: 2022-11-17 21:25 GMT

ஈரோடு எல்லப்பாளையத்தை சேர்ந்த தவமணி (வயது 32) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் எம்.ஏ. பிஎட். பட்டம் பெற்றுள்ளேன். எனது கணவர் மூலம் கோவையை சேர்ந்த ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் தனக்கு அமைச்சர் ஒருவர் நன்கு தெரியும் என்றும், தானும் ஒரு கட்சியில் பொறுப்பாளராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என கூறி, தேர்வுகள் இல்லாத நேரடி நியமன அரசு பணிகளை அதிகாரிகள் மூலம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

அதைத்தொடர்ந்து அரசு பணி பெற பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். அதன்பேரில், கலெக்டர் அலுவலகத்தில் பதிவு எழுத்தர் பணிக்காக நான் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கொடுத்தேன். அதைத்தொடர்ந்து, அவர் தலைமை செயலகத்திற்கு எங்களை அழைத்து சென்று, எனது பெயரில் அரசாணை வழங்கினார். கொரோனாவை காரணம் காட்டி பணி ஆணை பின்னர் வழங்கப்படும் என கூறினார். ஆனால், அதன் பிறகு எவ்வித ஆணையும் வழங்கப்படவில்லை. அவரிடம் பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னைப்போலவே எனது தம்பி, தங்கை, உறவினர்கள் என 19 பேரிடம் பல்வேறு பதவிகளுக்காக ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்