சத்யப்பிரியா கொலை வழக்கு - கைதான சதீஷுக்கு சிபிசிஐடி காவல்...!

மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Update: 2022-10-26 14:55 GMT

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றிருந்த கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை, சதீஷ் என்ற இளைஞர் ரெயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கில் கைதான சதீசை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று இரவு அல்லது நாளை காலை புழல் சிறையில் இருந்து காவலில் எடுக்கப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரிய நிலையில் ஒருநாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்