திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றாா்கள்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோன்று பூதேவி ஸ்ரீதேவி சமேத தேகளீச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். முன்னதாக கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் வேத பாராயணங்கள் முழங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் ஏஜென்டு கோலாகலன் தலைமையில் விழா குழுவினர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர். இதேபோன்று, சங்கராபுரம் மணி நதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதே போல் தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள், குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், காட்டுவன்னஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட சங்கராபுரம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், மணலூர்பேட்டை அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.