சத்தியமங்கலத்தில் தரமற்ற முறையில் வடிகால் அமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

சத்தியமங்கலத்தில் தரமற்ற முறையில் வடிகால் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினாா்கள்.

Update: 2022-11-23 21:48 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் கோபி செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே செம்மையன்புதூர் ரோட்டில் வடிகால் கட்டும் பணி நடந்தது. இதற்கு கான்கிரீட் போடுவதற்காக உடனடி எந்திர கலவை (ரெடி மிக்ஸ்) கொண்டுவரப்பட்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள், கான்கிரீட் போடும் தரையில் சேறும், சகதியும் உள்ளது. அதை அப்புறப்படுத்தாமல் அப்படியே கான்கிரீட் போடுகிறீர்கள் என்று கூறி பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து வடிகால் அமைக்கும் பணிக்கு வந்த ஊழியர்கள் பிரச்சினை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அங்கு வந்த அதிகாரிகள் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள், கான்கிரீட் போடும் இடத்தை சுத்தப்படுத்தாமல் அப்படியே போட்டால் கான்கிரீட் நிற்குமா?, தரமற்ற முறையில் பணி செய்யலாமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதிகாரிகள் தரமான முறையில் வடிகால் அமைக்கிறோம் என்று உறுதி அளித்தார்கள். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்