சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
மேச்சேரியில் சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி மீது கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேச்சேரி:
சாலை மறியல்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று மேச்சேரியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மேச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர செயலாளர் கோபால், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் பகத்சிங், கொளத்தூர் ஒன்றியக்குழு துணை தலைவர் மாரப்பன் மற்றும் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மேச்சேரி போலீசார், சதாசிவம் எம்.எல்.ஏ. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரை கைது செய்தனர். அவர்களை ஏற்றிச்செல்ல கொண்டு வரப்பட்டது. அந்த பஸ்சின் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் ஏற முயன்ற போது, முன்பக்க கண்ணாடி மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கியதில் அந்த பஸ் கண்ணாடி முழுவதும் உடைந்து விட்டது. தொடர்ந்து பஸ் எடுத்து செல்லப்பட்டது.
கைது
இதையடுத்து வேறு பஸ் வரவழைக்கப்பட்டு அதில் மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே மேச்சேரியில் அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த மேச்சேரி குக்கல்பட்டியை சேர்ந்த குமார் (வயது 44) என்பவரை மேச்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்
மேட்டூர் பஸ் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் வக்கீல் துரைராஜ் தலைமை தாங்கினார். இதில் மேட்டூர் நகர தலைவர் சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பு செயலாளர் அமுதா, கொள்கை விளக்க அணி செயலாளர் தனசேகரன், எம்.சி.சுகுமார், சதீஷ், ரமேஷ் உள்பட கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல், கொளத்தூர் ஒன்றியத்தில் கொளத்தூர் நால்ரோடு ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்புச் செயலாளர் வெடிக்காரனூர் ராஜேந்திரன், தின்னப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, கவுன்சிலர் எஸ்.பி.மணி மற்றும் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் பஸ் நிறுத்தத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மோகன், கவுன்சிலர் ரமேஷ், பிரபு, பழனிச்சாமி, கதிரவன், வெங்கட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை கருமலைக்கூடல் போலீசார் கைது செய்தனர்.
ஜலகண்டாபுரம்
இதேபோல் ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் சேலம் தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வகுமார் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் கந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் கீதாலட்சுமி, ராஜா, கோவிந்தராஜ், ராஜலட்சுமி, ராஜா, மாவட்ட துணைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் வெங்கடாஜலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.