சாத்தான்குளம்அரசு மருத்துவமனைவிரிவாக்கத்துக்குஇடம் ஒதுக்க எம்.எல்.ஏ.கோரிக்கை

சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் ஊர்வசி அமிர்த்ராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-20 18:45 GMT

தட்டார்மடம்:

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட சாத்தான்குளம் வட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார மக்கள் பயன்பாட்டிற்காக, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, விபத்து, அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் வார்டு ஆகிய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அந்த மருத்துவமனையின் பின்புறம் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தினை முறைப்படி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்க வேண்டும். மேலும் பெரியதாழை ஊராட்சி தற்போது படுக்கப்பத்து வருவாய் கிராமத்தில் உள்ளது. பெரியதாழையை புதிய வருவாய் கிராமமாக உருவாக்க அரசு நிர்ணயம் செய்துள்ளபடி மக்கள் தொகை உள்ளது. மேலும் பட்டாதாரர் எண்ணிக்கையும் 575 ஆக உள்ளது. இப்பகுதி மக்கள் படுக்கப்பத்து தலைமை இடத்திற்கு செல்வதற்கு மூன்று கிலோமீட்டர் தூரம் பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு செல்கின்றனர். பெரியதாழை கிராமத்தில் மீனவ சமுதாய மக்கள் அதிகமாக வசிப்பதால் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே படுக்கப்பத்து வருவாய் கிராமத்தில் இருந்து பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக பிரித்து அரசாணை வெளியிட வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர், சாத்தான்குளம் யூனியன் கவுன்சிலர் வி.எம். சுதாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்