சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம்

Update: 2022-09-11 12:37 GMT

அனுப்பர்பாளையம்

ரெயில்வே, தபால் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தை கண்டித்து சென்னை சாஸ்திரி பவனை நவம்பர் மாதம் 7-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வெளியீட்டு செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். பிரசார செயலாளர் சீனி. விடுதலை அரசு, புதுச்சேரி மாநில தலைவர் வீரமோகன், மாநில ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

கூட்டத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம், அர்ச்சனை மொழியாக தமிழ், உயர்கல்வியில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி உதவித்தொகை திட்டம், மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், அரசு பணிகளுக்கு தமிழில்தேர்வு போன்றவற்றை கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.

தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாகவும் அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

நீர் தேர்வில் இருந்து விலக்கு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை நிராகரித்து மாநில கல்வி கொள்கைக்காக குழு அமைத்துள்ள தமிழக அரசை பாராட்டுவதுடன், கல்வி உரிமையை பாதுகாத்திட கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் 6 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாளதாரம் சீரழிந்து வருகிறது. மத்திய அரசு பருத்தி, நூல், பஞ்சு ஆகியவற்றை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வந்து, விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். ரெயில்வே, தபால் உள்ளிட்ட ஒன்றிய அரசின் துறைகளில் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். இதை கண்டித்து நவம்பர் 7-ந்தேதி சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவனை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்