கரும்பு எந்திரத்தில் சேலை சிக்கி பெண் பலி
கரும்பு எந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழந்தார்.
எந்திரத்தில் சேலை சிக்கியது
திருச்சி உறையூர் வடக்கு வண்டிக்காரத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது வீட்டு அருகே கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகம்பாள் (வயது 36). நேற்று மதியம் முருகேசன் கரும்புச்சாறு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் முருகேசன், லோகம்பாளிடம் கடையில் சிறிது நேரம் வியாபாரத்தை பார்க்குமாறு கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். அதன்படி லோகம்பாள் வியாபாரத்தை கவனித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகம்பாளின் சேலை கரும்புச்சாறு தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதனால் அந்த எந்திரத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து அவர் சத்தம் போட்டார்.
சாவு
அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த எந்திரத்தில் சேலையுடன் இழுக்கப்பட்டதால் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் லோகம்பாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.