பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம்; அண்ணாமலை அறிவிப்பு

பாஜகவில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Update: 2022-08-14 04:08 GMT

சென்னை,

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார். தமிழக அரசியலில் ஒரே நாளில் ஏற்பட்ட இந்த அடுத்தடுத்து திருப்பங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சரவணன் நடந்து கொண்டதாகவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சரவணனை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து விட்டு பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்த நிலையில், இன்று காலை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்