மத்தூர்
ஓசூர் ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 52). விவசாயி. கடந்த 8-ந்் தேதி காலை ஆம்னி வேனில் சென்ற இவரை மோட்டர் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் நிலத்தகராறில் விவசாயி சிவராஜ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), சீனிவாசன் என்கிற காந்தி (26) ஆகிய 2 பேர் நேற்று போச்சம்பள்ளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.