ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி
ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் திருத்தலம் உள்ளது. இங்கு புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 75-வது ஆண்டு பவள விழா, புனித அருளானந்தரின் 375-ம் ஆண்டு பிறந்தநாள் விழா, புனித இன்னாசியார் புனித சவேரியார் ஆகியோர் புனிதர் பட்டம் பெற்ற 400-வது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவை இயேசு சபையின் சென்னை மறைமாநில தலைவர் ஜெபமாலை ராஜா கொடியேற்றி தொடங்கி வைத்தார். இதில் இயேசு சபை மதுரை மறை மாநிலத்தலைவர் அருட்தந்தை டெனிஸ் பொன்னையா, ஓரியூர் கலைமனைகளின் அதிபர் அருட் தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் அருட்தந்தையர்கள் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து திருவிழா சப்பர பவனி நடைபெற்றது. இதில் புனித அருளானந்தர், புனித இன்னாசியார் புனித சவேரியார் ஆகியோர் பவனியாக வந்து பக்தர்களுக்கு இறை ஆசீர் வழங்கினர். இதை தொடர்ந்து சிவகங்கை மறைமாவட்ட ஆயர் (பொறுப்பு) அருட்தந்தை ஸ்டீபன் அந்தோணி 116 குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.