காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய திருவிழாவில் சப்பர பவனி

தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய திருவிழாவில் சப்பரப்பவனி நடந்தது

Update: 2023-08-02 18:45 GMT

தொண்டி,

தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் மாதா ஆலய திருவிழாவில் சப்பரப்பவனி நடந்தது.

திருவிழா திருப்பலி

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பழமையான தூய செங்கோல் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 131-வது ஆண்டு திருவிழா கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் திருவிழா திருப்பலியும், மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த மாதம் 31-ந் தேதி புனித இன்னாசியார் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது.

திருவிழாவில் ஆடம்பர கூட்டு திருப்பலியை ஆர்.எஸ்.மங்கலம் மறை வட்ட அதிபர் அருட்தந்தை தேவசகாயம், பங்குத்தந்தை அருள் ஜீவா, அருட்தந்தை சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். இதைதொடர்ந்து நற்கருணை பவனியும், சப்பரபவனியும் நடைபெற்றது. வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித செபஸ்தியார், புனித சவேரியார், புனித செங்கோல் அன்னை ஆகியோர் கிராம வீதிகளில் பவனியாக சென்று இறை மக்களுக்கு இறையாசீர் வழங்கினர்.

அன்னதானம்

இப்பவனியில் கலந்து கொண்ட இறைமக்கள் கையில் ஜெபமாலை மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவின் பாடல்களை பாடியவாறு ஜெபம் செய்தனர். நேற்று காலையில் திருப்பலியை பங்குச்சந்தை அருள் ஜீவா தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். சப்பர பவனியில் புனித பதுவை அந்தோணியார், புனித அருளானந்தர், புனித செங்கோல் மாதா ஆகியோர் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக சென்று இறையாசீர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து கொடி இறக்கமும், அன்னதானமும் நடைபெற்றது.

இதனையொட்டி ஆலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிறப்பு வாண வேடிக்கைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் ஜீவா தலைமையில் இறை மக்கள், அன்பிய குழுக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்