புதுக்கோட்டை- திருமயம் சாலையில், வெள்ளாற்றின் அருகில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்களுடன் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டையிலிருந்து திருமயம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் அருகில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படவுள்ள சுமார் 75 மரக்கன்றுகளுக்கு இணையாக 750 மரக்கன்றுகள் நடும் விதமாக, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார். நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவி கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரபூபதி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.