நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
பொறையாறில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
பொறையாறு:
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா பொறையாறில் நடந்தது. விழாவிற்கு மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமாரவேல், உதவி கோட்ட பொறியாளர் இந்திரன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், பேரூராட்சி துணைத்தலைவர் பொன்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரங்கம்பாடி, ஆடுதுறை நெடுஞ்சாலை அருகில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நகர அவைத் தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெடுஞ்சாலை துறையின் இளநிலை பொறியாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.