மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு பயணம்
அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு பயணம் நடந்தது
காரைக்குடி
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், அணுமின் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல்கலாமின் நினைவு நாள் நாளை மறுநாள் (27-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் காரைக்குடியில் அப்துல்கலாம் பேரவையை சேர்ந்த சீனிமுகம்மது, அவரது மகன் முகமது சபீர் ஆகியோர் அப்துல்கலாமின் கனவுகளான புவி வெப்பமயமாதலை தடுத்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் காரைக்குடியிலிருந்து ராமேசுவரம் அப்துல்கலாம் நினைவிடம் வரை சைக்கிளில் செல்கின்றனர். அழகப்பா பல்கலைக்கழக அழகப்பர் சிலையில் இருந்து தொடங்கிய இந்நிகழ்வினை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தில் காரைக்குடி-ராமேசுவரம் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு இடைப்பட்ட 140 கி.மீ. தூரம் வரை மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டே தொடர்கின்றனர். நிகழ்ச்சியில் காரைக்குடி நகர் மன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் அப்துல்கலாம் பேரவையினர் கலந்து கொண்டனர்.