தூய்மை பணியாளர்கள் 'திடீர்' சாலை மறியல்

சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள்

சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்களும் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை கொட்டக்கூடாது, குப்பைகளை பெறும் பகுதிகளிலேயே குப்பையை அழித்துவிட வேண்டும், மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து கொண்டு வர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தினர் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் தூய்மைப் பணியாளர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிகளை புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹரிஹரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கெடுபிடி செய்வது, கூலி உயர்வு வழங்காதது, பணி பாதுகாப்பு வழங்குவது குறித்து தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு நேற்று காலையில் நகரில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படாததால் பல இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்