மாற்றுப்பணிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை தூய்மைப்பணியாளர்கள் முற்றுகை விழுப்புரத்தில் பரபரப்பு

மாற்றுப்பணிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-06 18:45 GMT


விழுப்புரம் நகராட்சி பொது சுகாதாரப்பிரிவில் தூய்மைப்பணியாளர்களாக 66 ஆண்களும், 58 பெண்களும் என மொத்தம் 124 பேர் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் அனைவரும், தங்களை மாற்றுப்பணிக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முடிவை நகராட்சி நிர்வாகம் கைவிடக்கோரியும் நேற்று காலை திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார், அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள், நகராட்சி ஆணையரிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், எங்களை அரசாணை 152-ஐ அமல்படுத்தி பொது கழிப்பறை, அரசு அலுவலகங்கள், கல்விக்கூடங்களில் பணியமர்த்துவது, தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிப்பதாகும். வருகிற 2023-ம் ஆண்டில் 13 தூய்மைப்பணியாளர்கள் பணிஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார்கள். நாங்கள் பனி, மழை, வெயில் என அனைத்தையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில் எழுந்து வந்து பணி செய்துவருகிறோம்.

நடவடிக்கை

எனவே ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களில் இணைத்து எங்களை பணிசெய்ய அனுமதி வழங்கவும், 10 வார்டுகளில் மட்டும் பணி செய்ய அனுமதி வழங்க வேண்டுமெனவும் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற நகராட்சி அதிகாரிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பேரில் அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்