கூலி உயர்வு வழங்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

கூலி உயர்வு வழங்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-07-07 21:45 GMT

கூலி உயர்வு வழங்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் மோகன், பொதுச்செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள், கலெக்டர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறி இருப்பதாவது:-

கூலி உயர்வு

நெல்லை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்ச கூலி அந்தந்த மாவட்ட கலெக்டரால் முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கு ரூ.25 மட்டும் உயர்த்தி ரூ.436 ஆக சம்பளம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கூலி உயர்வை ரத்து செய்து விட்டு, தினக்கூலி ரூ.600-க்கு மேல் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்