நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மதுரையில் நிலுவை சம்பளம் வழங்க கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-15 21:09 GMT


மதுரையில் நிலுவை சம்பளம் வழங்க கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள்

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளை கொண்டது. இந்த பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என கூறி 10-வது வார்டு மற்றும் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து சுப்பிரமணியபுரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பை அகற்றுதல், கழிவுநீர் அடைப்பு நீக்கம் போன்ற பணிகள் நடைபெறவில்லை.

இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள இரண்டு மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

போராட்டம்

இதைதொடர்ந்து 16 ஆண்டு காலமாக பணியில் இருந்து இறந்து போன தினக்கூலி குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும், வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பண பலன்கள் உடனடியாக தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோரிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட பின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மை பணி பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்