சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-08 13:37 GMT

ஆரணி

ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள்

ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 1-வது வார்டு முதல் 18-வது வார்டுகள் வரை தனியார் தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 19-வது வார்டு முதல் 33-வது வார்டு வரை நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்.

நகராட்சி நிர்வாகத்தில் நகராட்சி கடைகளில் வாடகை இனங்களில் உள்ள கடைக்காரர்களின் வாடகை நிலுவை, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி என பல்வேறு இனங்களின் மூலமாக சுமார் ரூ.16 கோடி வரை பாக்கி உள்ளது.

இந்த நிலையில் அரசின் சார்பில் ஆரணி நகராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய நிதியினை ஏற்கனவே பெறப்பட்ட கடன் தொகைக்காக பிடித்தம் செய்து மாதத்திற்கு ரூ.10 லட்சம் வரை மட்டுமே கிடைக்கிறது.

இதனால் வரிபாக்கியை வசூலித்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் நிலை உள்ளது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் 18-வது வார்டு வரை பணியாற்றும் தனியார் தூய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்டு மாதம் முதல் 4 மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக தனியார் ஒப்பந்ததாரரும் நகராட்சி அலுவலகத்தில் சம்பளம் வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் தனியார் தூய்மை பணியாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு மாத சம்பளத்தினை உடனடியாக தனியார் தூய்மை பணியாளர்களின் ஒப்பந்ததாரரிடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது

அதற்கு 4 மாத சம்பளமும் உடனடியாக வழங்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வெளியே போக மாட்டோம் என்று கூறி அலுவலகம் வெளியே சென்று கால்வாயில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்